Jumaana Syed Ali

96 – ஒரு அனுபவம்!

96 - Tamil Movie Review
Spread the love

ஏற்கனவே பல யூடூப் விமர்சனங்கள் எல்லாமே இந்த படத்த கட்டாயம் பாக்கணும்னு தோண வச்சுக்கிட்டு இருந்த நிலையில திடீர்னு நள்ளிரவுல என்னுடைய 96களின் முக்கிய அடையாளமான நண்பர்களில் ஒருவனான ஞானி கிட்ட இருந்து ஒரு வாட்சப் குறுந்தகவல் – “டேய் யாரோ உன் கதையை திருடிட்டாங்கடான்னு”. என்னுடைய மிக முக்கியமான நண்பன், என்னுடைய கல்லூரி தோழன் கிட்ட இருந்து இப்டி ஒரு மெசேஜ்ய பாத்ததுமே இதுக்கு மேல பொறுக்க முடியாதுன்னு அடுத்த நாளுக்கே பீனிக்ஸ் மால்ல 2 டிக்கெட் புக் பண்ணினேன், எனக்கும் என் மனைவிக்கும்.

ஞானியோட நண்பன்னதும் தூய தமிழ்ல கவிதை வடிவத்துல எழுதுவேன்னுலாம் எதிர்பாக்காதீங்க, நமக்கு தங்கிலீஷ் தான் வரும், அதனால பொறுத்துக்கொள்ளவும்! தமிழ் வாழ்க! தமிழ் வாழ்க! என்னோட காதல் எல்லாத்தையும் பக்கத்துக்கு சீட்ல இருக்கிற அவன்ட தான் எப்போவும் கொட்டுவேன். கிளாஸ் நடந்துகிட்டு இருக்கும் போதே அத ஒரு கவிதையா எழுதி கைல குடுத்துருவான். அவன் எனக்காக எழுதுன கவிதைகளை சேர்த்தா மட்டுமே 2 புதிய புத்தகங்கள் வெளியிடலாம்! என்னுடைய வலிகளை அதிகமாக சுமந்த இன்னொரு ஜீவன் அவன்னு சொன்னா அது மிகை ஆகாது!

டேய் நீ கட்டாயம் அழுவேடான்னு வேறே நண்பன் சொன்னதால மனைவியோட போறதுல கொஞ்சம் தயக்கம் தான். ஆனா அவங்க வழக்கம் போல நாளைக்கு என்ன கலர் ஷால் போடணும், என்ன கலர் செருப்பு போடணும் அப்புறம் மஸ்காரா அது இதுன்னு மறுநாள் சாய்ங்காலம் 4-மணி ஷோக்கு நைட்ல இருந்தே ரெடி ஆக ஆரம்பிச்சிட்டாங்க. நான் அந்த இரவுல பலமுறை படத்தோட டீசரயும் ட்ரைலரயும் பாத்துகிட்டே ஒரு வழியா தூங்கிட்டேன்.

கொஞ்சம் முன்னாடியே போய் செல்ஃபிலாம் எடுத்து முடிச்சு ஜோடிகளுக்காக ஒதுக்கப்பட்ட 2 சீட் வரிசைல போய் தனியா அமர்ந்தோம். முதல் சீன பாத்ததுமே என் மனைவி இது உங்க கதை தான் போலன்னு சொன்னா. போட்டோகிராஃபி ல எனக்கு ஆர்வம் ஜாஸ்தி, அதான் அந்த கமெண்ட். ஆமா இவர் அப்டியே போட்டோ எடுத்து கிழிச்சு தள்ளிட்டாலும்ன்னு எவனோ திட்ற மைண்ட் வாய்ஸ் வேற கேக்குது! அடேய் மனுஷன கொஞ்சம் தனியா விடுறீங்களாடா!

கொஞ்சம் கொஞ்சம் சிரிச்சு நடுல எதெல்லாமோ பேசிட்டு இருக்கும் போதே, கேமரா அந்த ஸ்கூல்க்கு உள்ள ராமோட சேர்ந்து பயணிக்கும் போது மனசு எங்க கல்லூரிக்குள்ள பயணிக்க ஆரம்பிச்சுது. அப்புறம் ஒரே மயான அமைதி தான், இன்டெர்வல்ல பாப்கார்ன் திங்க தான் வாயவே திறந்தேன்.

96 - Tamil Movie

என்னுடைய படிப்பெல்லாம் முடிஞ்சு ஒரு 2 வருஷம் கழிச்சு தனியா அந்த கல்லூரிக்குள்ள போய் சுத்திட்டு வந்த அந்த காட்சிகள் எல்லாம் அப்டியே படமாக்கப்பட்டிருக்கு! என்ன ஒரு வித்யாசம்னா ராமுவும் ஜானுவும் ஒரே வகுப்பு, ஆனா நாங்க வேற வேற டிபார்ட்மென்ட்! அதனால நான் ரெண்டு பேரோட வகுப்பறைக்குள்ளேயும் போய் கொஞ்சம் நேரம் மனசாரிட்டு வந்தேன்! அவளோட இருக்கைல போய் கொஞ்சம் நேரம் உக்காந்துட்டு அந்த டெஸ்க்ல கொஞ்ச நேரம் தலை சாஞ்சு படுத்துட்டு வந்த அந்த ஞாபகங்கள் எல்லாம் இன்னும் இருக்கு.

96 - Tamil Movie

அவ வழக்கமா வண்டிய நிறுத்துற அந்த பார்க்கிங், அப்புறம் எங்க கேன்டீன், அந்த ஆலமரம் எல்லாம் தாண்டி வெளிய வரும் போது மனசு கனத்து போய் இருந்துச்சு! கல்லூரிக்குள்ள நடந்து போகும் பொது அவ வருகையை எதிர்பாத்து திரும்பி திரும்பி நடந்த அந்த காலங்கள் எல்லாம் திரும்ப போறதில்லைன்னு தெரிஞ்சாலும் மனசு திரும்பி திரும்பி பாத்துக்கிட்டே வந்துச்சு!

ஜானு ராமுகிட்டே முதல்ல காதல பத்தி பேசுற அதே காட்சி தான் எங்களுக்கும். நான் என்னோட தோழி மூலமா தூது அனுப்புனதும் ஒரு ரெண்டு நாள் கழிச்சு அந்த அம்மா செம கெத்தா என் கிளாஸ்க்கே வந்து பேசிட்டு போனாங்க, நான் தான் ராம் மாதிரி மயங்குற நிலைக்கு போய்ட்டேன். ஆனா அப்புறம் ஒரு ரெண்டு மூணு மாசம் கழிச்சு தான் மேடம் ஓகேவே சொன்னாங்கங்கறதுலாம் வேற விஷயம்! அவள் வராத நாட்களும் விடுமுறை நாட்களும் தான் கொடுமையானவைங்கிறது வலியான உண்மை!

கல்லூரி படிப்பு முடிஞ்ச சில மாதங்களிலேயே ஜானுக்கு திருமணமும், எனக்கு தனிமையும் வலியும் வரமாக கெடச்சுது. கல்யாணமே வேண்டாம்னு இருந்து அப்புறம் 7 வருஷம் கழிச்சு திருமணம்! இப்போ 22 வருஷம் ஆச்சு, எனக்கும் ஒரு அன்பான மனைவி இருக்காங்க, ஒரு பெண் குழந்தை இருக்கா! வாழ்க்கையோட ஓட்டத்துக்கு ஏத்த மாதிரி வாழவும் பழகிகிட்டேன்.

11 வருஷம் கழிச்சு ஜானுவோட பேசவும், அப்புறம் என் மனைவியோட போய் அவங்கள நேர்ல சந்திக்கவும் இரு முறை வாய்ப்பு கிடைச்சுது! ரொம்ப தூரத்துல இருந்தாலும் அன்பு மட்டும் இன்னும் பக்கத்துலயே தான் இருக்கு! ராம் ரொம்ப தூரம் போயிட்டியா என்கின்ற ஜானுவின் கேள்விக்கு என்ன பதிலோ அதுவே தான் என்னுடையதும். கண்ணை நேருக்கு நேரா பாத்து பேச முடியாம போன இந்த நாட்களில் உலகின் ஏதோ ஒரு மூலையில் அவள் பத்திரமாக வாழ வேண்டுமே என்ற ஏக்கத்தோடும் பிரார்த்தனைகளோடும் அவள எங்க விட்டனோ அங்கேயே தான் நிக்குறேன்!

96 - Tamil Movie

படம் முடிஞ்சு வெளிய வந்ததும் என் மனைவி கேட்டாங்க, இது சாதாரணமான படம் தானே, கிளைமாக்ஸ்லயாச்சும் அவங்க சேந்துருக்க கூடாதா, மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்குனு! எது நிஜமோ அது தானே வலிக்கும், அதான் கிளைமாக்ஸ் அப்டி இருக்குனு சொன்னேன், இன்னும் சமாதானம் ஆகல அவங்க!

ஏன் அமைதியா வரீங்க, அழுத்தீங்களான்னு கேட்டா, சிரிச்சிக்கிட்டே வந்துட்டேன். பார்க்கிங் வந்து பைக் எடுக்குற கேப்ல ஞானிக்கு மட்டும் வாட்ஸ்அ ப் பன்னினேன் – “படம் செம டா, என்கிட்ட வார்த்தைகளும் இல்லை, கண்ணீரும் இல்லை” ன்னு !

ஒரே பாட்டுல பணக்காரன் ஆகுற ஹீரோ, அப்புறம் யாரோ எப்டியோ போனாலும் கிளைமாக்ஸ் ல ஒன்னு சேருற ஹீரோ ஹீரோயின் படங்களுக்கு மத்தியில எதார்த்தம் என்னவோ அத சொன்னது தான் இந்த படத்தோட மிக பெரிய வெற்றி! இன்னும் நிறைய எழுதலாம், அவ்ளோ இருக்கு!

வீட்டுக்கு வந்ததும் என் மனைவி, எனக்கே இது ரொம்ப வலியா இருக்குதுன்னா உங்களுக்கு எவ்ளோ கஷ்டமா இருக்கும், ஏதாச்சும் சொல்லுங்க ஷேர் பண்ணுங்கன்னு மாத்தி மாத்தி கேட்டுகிட்டே இருந்தாங்க. எனக்கு ஏதும் சொல்ல வார்த்தைகள் வரல, ஏதாச்சும் எழுதுறேன்னு சொன்னதும் “சரி, ஐ எம் வெயிட்டிங்” ரேஞ்சுக்கு பதில் சொல்லிட்டு போய்ட்டாங்க. இந்த மாதிரி மனைவி அமைவதும் ஒரு வரம் தான்!

ஆகவே எனக்கு இத எழுத தூண்டிய நண்பன் ஞானிக்கு நன்றி!

குறிப்பாக என் மனைவிக்கும் நன்றி! அப்ப தான் வீட்ல சோறு கிடைக்கும், நமக்கு சோறு முக்கியம்!

96 – ஒரு அனுபவம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to top