Jumaana Syed Ali

சொல்லாமல் சென்று விட்ட ராஜகுமாரன்

Remembering Raj Kumar - Sadakathullah Appa College (1996 - 1999)
Spread the love

“மச்சி எப்டிரா இருக்கே, நானே கால் பண்ணணும்னு நெனச்சேன் டா நீ கரெக்ட்டா பண்ணிட்டே”. இப்படி தான் ஒவ்வொரு முறையும் நான் ஃபோன் செய்யும் போது ராஜிடம் இருந்து பதில் வரும். அவன் அழைத்து இருந்தாலும் சரி, நான் அழைத்து இருந்தாலும் சரி இதுவே எங்களின் அன்பின் பரிமாற்றங்களாய் எப்போதும் இருக்கும். 

கல்லூரி காலம் முடிந்து அதன் பிறகு சென்னையில் வேலை பிறகு திருமண வாழ்க்கை என்று நாங்கள் செட்டில் ஆன பிறகு இது போன்ற அழைப்புகள் அவ்வப்போது நடக்கும். 

“எப்படா மீட் பண்ணலாம், நீயே சொல்லு, எங்கயாச்சும் லஞ்ச் இல்லாட்டி டின்னர்க்கு மீட் பண்ணுவோம், பட் ஒன்லி யு அண்ட் மீ” அப்டின்னு சொல்வான். மற்ற நண்பர்களோடு சேர்ந்து நாங்கள் சந்திப்பது ஒரு புறம் இருந்தாலும் நானும் அவனும் மட்டும் தனியாக ஏதாவது உணவகத்தில்  சந்தித்து பழைய கதைகள் பேசி பிரிந்து செல்வதை வாடிக்கையாக வைத்திருந்தோம்.

கல்லூரி நாட்களில் கூட எல்லா நண்பர்களோடும் ஒன்றாகச் சுற்றினாலும் சில நேரம் நானும் அவனும் மட்டும் தனியாக கழண்டு கொள்வோம். மஹாராஜா நகரில் இருக்கும் ஒரு டீக்கடைக்கு சென்று சிறிது நேரம் பேசிக்கொண்டு இருப்போம் அல்லது எங்காவது உணவு அருந்த சென்று விடுவோம். சரியான நேரத்தில் மீண்டும் வகுப்பில் வந்து ஒன்றும் நடக்காதது போல அமர்ந்து கொள்வோம். 

சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியின் என்னுடய ஒவ்வொரு நாளையும் அசைபோட்டு பார்த்தால் ஞானி மற்றும் ராஜ் இருவரும் தான் முழுவதுமாக நிரம்பி இருப்பார்கள். காலையில் தென்காசியில் இருந்து கிளம்பி ஜங்ஷன் வந்து அங்கிருந்து மஹாராஜா நகர் சென்று ராஜ் மற்றும் விஸ்வநாதனோடு சேர்ந்து பைக்கில் கல்லூரி வந்து சேர்வேன். மாலை ஞானியோடு சேர்ந்து ஜங்ஷன் சென்று அரசனில் டீ அருந்தி விட்டு பின்னர் எனக்கு பஸ்சில் சீட் பிடித்து குடுத்து வழி அனுப்பி விட்டுத் தான் செல்வான் ஞானி. 

Remembering Raj Kumar - Sadakathullah Appa College (1996 - 1999)
Gnani & Raj Kumar @ Kodaikanal Trip in 1998

வீடு வந்த பிறகும் எஸ்.டிடி காலை பற்றி எல்லாம் எந்த கவலையும் இல்லாமல் ராஜோடும் ஞானியோடும் அன்றைய கதைகளையும் மறு நாள் திட்டங்களையும் எல்லாம் பேசிவிட்டு தான் உறங்கச் செல்வேன். 

ராஜோடு சேர்ந்து பைக்கில் நெல்லையில் சுற்றாத இடமே இல்லை என்று சொல்லலாம். பொதுவாக நான் ராஜ் விஸ்வநாதன், அல்லது நான் ராஜ் ஞானி, அல்லது நான் ராஜ் ஸ்ரீதர் என்று மும்மூர்திகளாகவே எப்போதும் சுற்றுவோம். எங்களோடு சேர்ந்து வருவது விஸ்வநாதனா ஞானியா அல்லது ஸ்ரீதரா என்பது தான் மாறுமோ தவிர நாங்கள் எப்போதும் பிரிந்ததே இல்லை. அவனுடைய வீட்டில் சில முறை தங்கி இருக்கிறேன். விடிய விடிய பேசிக் கொண்டு இருந்து விட்டு டீ குடிக்க எங்காவது சென்று சுற்றி விட்டு வருவது என எப்போதும் நீங்காத நினைவுகள் அவை. 

சென்னை வந்து கொஞ்சம் செட்டில் ஆன பிறகு மறுபடியும் எங்கள் சந்திப்பு அடிக்கடி தொடர்ந்தது. ஓரிரு முறை மற்ற நண்பர்களோடு சேர்ந்து சந்திப்பு அதன் பிறகு ஒரு முறை ஞானியும் நானும் என் மனைவி மற்றும் மகளோடு சேர்ந்து அவன் வீட்டில் சந்திப்பு அதன் பிறகு தனிப்பட்ட முறையில் சந்திப்பது என எங்கள் உறவு நீண்டு கொண்டே தான் இருந்தது. 

கடந்த சில மாதங்களுக்கு முன்பு ‘மச்சி டின்னர்க்கு மீட் பண்ணலாம் டா’ என்று சொல்லி இருந்தான். வழக்கமாக நாங்கள் சந்திக்கும் உணவகத்தில் அவனுக்காக காதிருந்த போது தாமதமாக வந்தவன் ‘மச்சி சாரிடா வீட்ல மஞ்சும்மல் பாய்ஸ் படம் பாக்கணும்னு சொல்லிட்டாங்க அப்டியே படம் முடிஞ்சு அவங்களையும் சர்ப்ரைஸா டின்னர்க்கு கூட்டிட்டு வந்துட்டேன் டா. அவங்க தனி டேபிள்ல இருக்கட்டும் நாம 2 பேரும் தனி டேபிள்ல உட்காரலாம்’ என்று என் கூச்சத்தை போக்க என்னோடு தனியாக வந்து அமர்ந்தான். ‘மச்சி நெக்ஸ்ட் டைம் இப்படி ஏதாச்சும் பிளான் இருந்தா முன்னாடியே சொல்றேன் நீயும் உன் ஃபேமிலிய கூட்டிட்டு வந்திரு என்று சொன்னான். 

கிளம்பும் போது சாரி மச்சி அடுத்து ஒரு மாசத்துல நாம 2 பேரும் மட்டும் மறுபடி மீட் பண்ணுவோம் டா, ஏதும் நினைச்சுக்காதே என்று சொல்லி விட்டு போனான். ஆனால் அது தான் எங்களுடைய கடைசி சந்திப்பாக இருக்கும் என்று இப்போதும் கூட என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை.  

Remembering Raj Kumar - Sadakathullah Appa College (1996 - 1999)
Srithar, Murali, Avudaiyappan, Syed Ali, Raj Kumar & Fazuludeen

செப்டம்பர் 6 ஆம் தேதி காலை அவ்வளவு வலியோடு தொடங்கும் என்று கனவில் கூட நினைத்தது இல்லை. பத்து நாட்களாக உடல் நலம் சரி இல்லாமல் இருந்தவன் அதிகாலையில் இறந்து போய் விட்டதாக எங்கள் கல்லூரியின் வாட்சப் குரூப்பில் தகவல் வந்த போது அதிர்ந்து போனேன். நடராஜனை அழைத்து கேட்ட போது நான் நல்ல படியா வீட்டுக்கு திரும்பி வந்துருவேன் பிரெண்ட்ஸ் கிட்டலாம் சொல்ல வேணாம்னு சொல்லி இருக்கான், வராமலே போய்ட்டான். என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை. மிகுந்த பாரத்தோடு அவன் வீட்டுக்கு சென்ற போது அங்கே எழுந்த அழு குரல்கள் மேலும் ரணப் படுத்தியது. தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அவன் முகத்தை கடைசியாக ஒரு முறை பார்க்க அருகில் சென்றேன், ஆழந்த உறக்கத்தில் இருக்கும் ஒரு சிறு குழந்தையை போல் தூங்கிக் கொண்டிருந்தான் அவன். சிறு அற்ப விஷயம் என்றாலும் மச்சி என் மேல ஏதும் கோபம்ன்னா சொல்லிறு மச்சி, ஏதும் நினைச்சுக்காத மச்சி என்று சிறு குழந்தையாய் அன்பை எப்போதும் வெளிப்படுத்துபவன் ஒருவன் இனி நம்மோடு இல்லை என்பதை என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. 

அவன் சொன்ன அந்த அடுத்த சந்திப்பு கொஞ்சம் சீக்கிரமாக ஏதாவது ஒரு வகையில் நடந்திருக்க கூடாதா என்று ஏங்காமல் இருக்க முடியவில்லை. கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஞானி சென்னை வந்த போது அதே உணவகத்துக்கு சென்றிருந்தோம். ராஜோடு கடைசியாக நின்று பேசிய அந்த பார்க்கிங் வராண்டா நானும் அவனும் அமர்ந்து உண்ட இருக்கை என எல்லாவற்றையும் நினைத்துப் பார்த்து பசி எல்லாம் பறந்து போனது. 

எங்களின் கடைசி சந்திப்பின் போது மச்சி நீ அடிக்கடி பெங்களூர் போய்ட்டு வாரே நான் இதுவரைக்கும் ஒரு டைம் கூட பெங்களூர் போனது இல்லடா அடுத்த டைம் போகும் போது என்னையும் கூட்டிட்டு போ என்று சொன்னான். கட்டாயம் போலாம்டா என்று சொல்லிவிட்டு வந்தேன். இனி ஒவ்வொரு முறை பெங்களூர் செல்லும் போதும் அவன் நினைவுகளை மட்டுமே கூட அழைத்துச் செல்ல முடியும்!

Remembering Raj Kumar - Sadakathullah Appa College (1996 - 1999)
Syed Ali, Ganesh, Avudaiappan & Raj Kumar

2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 4ஆம் தேதி இரவு  9.30 மணிக்கு என்னை தொலைபேசியில் திடீரென அழைத்தான். அழைத்தவன் வழக்கத்துக்கு மாறாக சம்பந்தம் இல்லாமல் ஒரு சில வார்த்தைகளை மட்டும் பேசிவிட்டு வைத்து விட்டான். அவன் பேசும் வழக்கமான தொனி ஏதும் இல்லாமல் சம்பிரதாயத்திற்காக பேசியதை உணர முடிந்தாலும் அவனை உடனே அழைத்து பேச எனக்கு நேரம் இல்லை, ஒரு முக்கியமான வேலை ஒன்றின் கெடுபிடியில் அவசரமாக செயல்பட்டுக் கொண்டு இருந்ததால் நாளை அழைக்கலாம் என்று வேலையில் மூழ்கிப் போய் விட்டேன். அடுத்த 20 நிமிடம் கழித்து மீண்டும் அழைத்தான், அப்போதும் அவ்வாறே நடந்து கொண்டான். எனக்கு ஒன்றும் புரியவில்லை, சரி வேலை முடிந்ததும் அழைத்து பேசலாம் என்று மறுபடியும் வேலையை தொடர ஆரம்பித்தேன். இரவு 10.30 மணி இருக்கும் போது மீண்டும் அழைத்தான், ‘மச்சி என்னடா ஆச்சு, ஏதும் ப்ராப்ளமா ஆர் யு ஆல் ரைட்’ என்று கேட்டேன். 

‘ஆல் ரைட் மச்சி, ஒண்ணும் இல்லை டா, நம்ம காலேஜ் லைப்ல ஆரம்பிச்சு இன்னிக்கு வரைக்கும் என பெர்த்டேக்கு நீ விஷ் பண்ணாம இருந்ததே இல்லை, அதான் உனக்கு ஞாபகப்படுத்த தான் திரும்ப திரும்ப கால் பணனேன்டா சாரி’ என்று சொன்னான். ஒரு நிமிடம் நொந்து போய் விட்டேன், முந்தைய நாள் இரவு கூட ஞாபகம் இருந்தது, காலையில் அவனை அழைத்து பேச வேண்டும் என்று நினைத்திருந்தேன், வேலை நெருக்கடியில் எவ்வாறு மறந்து போனேன் என்றே நினைவில் இல்லை. ரொம்ப சாரிடா, வேலை பிஸில விட்டுட்டேன்டா மன்னிச்சிக்கோடா மாப்ள என்றேன்.  

அதெல்லாம் ஒண்ணும் இல்லடா, நெக்ஸ்ட் வீக் நம்ம டின்னர்க்கு  மீட் பண்ணலாம் மச்சி, என் டிரீட், நீ இப்ப விஷ் பண்ணிட்டேலாடா  எனக்கு அது போதும் நிம்மதியா போய் தூங்குவேன்னு  சின்ன குழந்தை மாதிரி சொல்லிவிட்டு தூங்கப் போனான்!

இன்று டிசம்பர் மாதம் 4ஆம் தேதி, உனது பிறந்த நாள். நான் விஷ் பண்ணாமலே எப்படி மச்சி நீ நிம்மதியாக உறங்கிப் போனே? 

பிரிவுகள் ஒன்றும் எனக்கு புதிதல்ல, இருந்த போதும் அந்த கொடிய வலிகளின் பட்டியலில் நீயும் ஏன் சேர்ந்து போனாய்?

நீ முந்திக் கொண்டாய். எங்களுக்கான குறிக்கப்பட்ட நேரமும் துளியும் பிந்தப்போவாதில்லை என்றாலும் பணம் பதவி பகட்டு சுயநலம் என்று ஓடிக் கொண்டிருக்கும் இந்த அவசர உலகில் எந்த சத்தமும் இல்லாமல் திடீரென நின்று போகக் கூடிய கடைசி நேர மூர்ச்சை இழுத்து பிடித்துக் கொண்டு ஏதோ நம்பிக்கையில் ஓடிக் கொண்டே இருக்கிறோம். 

நிச்சயமாக ஒரு நாள் நாங்களும் முற்றிலுமாய் நின்று போவோம்!

‘ஜுமானா’ சையத் அலி

More Posts to read:

சொல்லாமல் சென்று விட்ட ராஜகுமாரன்

3 thoughts on “சொல்லாமல் சென்று விட்ட ராஜகுமாரன்

  1. It’s a pathetic moment.. Alhamdulillah.. After long time I am seeing my class mates. By grace of almighty it’s a great and right time to see all of you. Masha Allah..
    Live long happy healthy and peaceful life forever.
    My heartfelt condolences to Mr Rajkumar.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to top