என்னைப் பார்ப்பாயா என்று
எத்தனை முறை ஏங்கியிருப்பேன்
என்னெதிரே நீ வரும் பொழுது!
ஆனால் அத்தனை முறையும்
நீ என்னை திரும்பிப் பார்த்ததில்லையே
என் மனம் எப்பொழுதுமே
உன் பக்கம் திரும்பியிருந்தும்…
உன் நினைவாக தினம் நூறு
கவிதைகள் எழுதி வைத்துள்ளேன்…
அவை ஒவ்வொன்றையும் படித்து விட்டு
நீ கண்ணீர் விட்டு அழ வேண்டும்
என் நெஞ்சத் தீயை அணைப்பதற்காக!
நீ விட்டுச் சென்ற உன் கால்களின்
கொலுசோசை என்னோடு தொடர்ந்து
ஒலித்திடவே ஆசை…
ஆனால் உன்னையே எண்ணி துடித்துக்
கொண்டிருக்கும் என் இதய ஓசையின்
முன்னால் உன் கொலுசோசை சப்தம்
இழப்பதை தாங்கிக் கொள்ள
முடியாது என்னால்!
உன் பார்வைக்கேங்கி உனைப் பார்க்கும்
பொழுது தான் காதலின்
வேதனை தெரிந்தது…
எப்பொழுதாவது நீ எனைப் பார்க்கும்
பொழுது தான் காதலின்
நரக சுகம் புரிந்தது…
சற்றே தயக்கத்துடன் நீண்ட தடுமாற்றத்திற்குப் பின்
உனக்கு முதல் முறையாக ஒரு
வாழ்த்து மடல் அனுப்பினேன்!
நான்கு நாட்கள் கழித்து
உன் தோழியோடு வந்து
என்னிடத்திலே நீ நன்றியுரைத்தாய்!
நீ நன்றி சொல்லாதிருந்தாலும் கூட
நான் கவலைப்பட்டிருக்க மாட்டேன்…
அந்த நான்கு நாட்கள் என்
நினைவுகளை அசை போட்டிருப்பாயே
அது போதும் எனக்கு!
சிரித்துக் கொண்டே சொன்னாய்;
“வாழ்த்து மடல் நல்லா இருந்திச்சு” என்று…
சிதறிப் போனவன் நான் தான்!
“பார்க்கலாம்”…
சொல்லிவிட்டுக் கிளம்பினாய்
உன் தோழியின் கரம் பற்றி…
என் மனம் பற்றியுனை
இழுப்பது கூடத் தெரியாமல்!
எனக்கொரு ஆசை…
அடுத்த முறை என்னிடம்
பேசும் பொழுது
வைத்த விழி அகலாது…
நீ எனைப் பார்க்க வேண்டும்!
ஆனால் அது என்னாலும்
முடியுமா என்றே தெரியவில்லை…
~ ‘Jumaana’ Syed Ali


